பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அலுவலர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பாடாலுர்: வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ஆலத்தூர் தாலுகா அலுவலக அலுவலர் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நொச்சிகுளம், ஜமீன் பேரையூர், புஜங்கராயநல்லூர், கொட்டரை, இலுப்பைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களின் வளத்தை அதிகரிக்கும் வகையில் வண்டல் மண் எடுப்பதற்கு தமிழக அரசு இலவசமாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும் வண்டல் மண் எடுப்பதற்கான இணையதள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கும் பணியில் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ரெக்கார்டு ரூமில் பணிபுரியும் ஒருவர், வண்டல் மண் எடுக்க அனுமதி பெறுவதற்காக வந்தவர்களிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்திலேயே பணத்தை வாங்கி எண்ணும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலாகி வருவது பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என முதல்வர் விஜய் கூறுகிறார். ஆனால் அவரது ஆட்சியில் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. அதிகரித்து தான் காணப்படுகிறது. ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் பணம் பெறுகின்றனர். இதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: