சென்னை: மேகதாது அணை திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று மேகதாது தொடர்பாக கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக, 2014ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், பிரதமரை நேரில் சந்தித்தும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தனது தலைமையிலான ஆட்சியிலும் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பிரதமருக்கும், மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சருக்கும் பலமுறை கடிதங்கள் வாயிலாகவும், நேரில் சந்தித்தும் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், எந்த ஒரு தனி மாநிலமும் அதில் தனி உரிமை கோர முடியாது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்படுகை மாநிலங்களின் (தமிழ்நாடு) ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் (கர்நாடகம்) எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 24.708 லட்சம் ஏக்கர் என்பதை உறுதி செய்த நீதிமன்றம், மாதாந்திர அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவின் குடிநீர் தேவையை காரணம் காட்டி 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும், 20க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும், அடிப்படை உரிமைகளும் கடுமையாக பாதிக்கப்படும். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட பலாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துளார், கர்நாடக முதல்வர் சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப திட்ட அறிக்கையை சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் மீண்டும் சமர்ப்பித்துள்ளார், இதற்கு அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. நீண்ட நெடுங்கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும், காவிரி ஆற்றில் நமக்குள்ள உரிமையையும் காக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். எனவே, விவசாயிகளின் நலன் காக்க தமிழக முதல்வர் கொண்டுவந்த அரசின் இந்த தனித் தீர்மானத்தை அதிமுக சார்பாக ஒருமனதாக ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
