சென்னை: ஆளுநர் உரையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசியதாவது: மாநில உரிமைகளுக்கான உரத்த குரலாக இன்றும் ஒலிப்பது தமிழ்நாடுதான். தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும். இறுதியில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்ற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் 2 முறை ஒலிக்கப்பட்டது. அதற்காக ஆளுநர் நன்றி சொல்கிறார். ஆளுநர் அவையை இணக்கமாக நடத்தி கொடுத்தார் என சபாநாயகரான நீங்கள் சொன்னீர்கள்.
உங்கள் இணக்கம் எதுவரை போகப்போகிறது, எப்படி வெளிப்பட போகிறது?. அவை முன்னவர் செங்கோட்டையன்: தேசிய கீதம் 2 முறை ஒலிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. 140 கோடி மக்கள் ஏற்றுக்கொள்ளும் தேசிய கீதத்தை 2 முறை ஒலிபரப்ப செய்வது வரவேற்கத்தக்க ஒன்று.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகுதான் தேசிய கீதம் பாடப்பட்டது. நீங்கள் எந்த உறுதிப்பாட்டோடு இருந்தீர்களோ? அதே உறுதிப்பாட்டோடுதான் நாங்கள் கடைபிடித்திருக்கிறோம். ஆளுநரோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எந்த மாநில அரசாங்கமாக இருந்தாலும் அதன் கொள்கையாக இருக்கும்.
மாநிலங்களுக்குரிய உரிமையையும், மக்களுக்கான உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம். இதுதான் இந்த ஆளுநர் உரையின் அடிப்படை. வேறு எந்த பாடல்களை பாடவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இல்லாமல், அப்படி நிர்பந்தங்கள் வந்திருந்தாலும் அதை தடுத்து நிறுத்துகின்ற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. எதை எப்படி அணுக வேண்டும் என்ற அணுகுமுறையை இறைவன் எங்களுக்கு தந்திருக்கிற அனுபவத்தின் காரணமாகவும், மக்கள் தந்திருக்கிற ஆதரவு காரணமாகவும் மிகச்சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
சிவசங்கர் (திமுக): காட்டாற்று வெள்ளம் வருகிற போது பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அணை கட்டப்படுகிறது. கட்டப்படும் அணையில் சிறிய நீர் கசிவுதானே என நீங்கள் சொல்கிறீர்கள். அந்த நீர் கசிவை விட்டால் ஒரு செங்கல் உருவப்படும், பின்னர் படிப்படியாக உருவப்படும் வெள்ளம் உள்ளே போகும். அப்படி போகாமல் தமிழ்நாடு காப்பாற்றப்பட்டதினால்தான் இன்று தமிழை காத்திருக்கிறோம். இலகுவாக இன்னொரு மொழி என்று ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் மற்ற மாநிலங்களில் தாய்மொழியை இழந்து இருக்கிறார்கள். இப்படிதான் அவர்கள் மெல்ல விட்டார்கள். மொத்தமாக உள்ளே நுழைந்துவிட்டது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: முதல்வர் விஜய் பதவியேற்பதற்கு முன்பு, பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அவர் உள்துறை அமைச்சர் சொன்னதைத்தான் செய்ய முடியும் என்றார். அதனை தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவிலும் வைத்தோம். ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் பதவியேற்பு விழா நடக்கும் போது மாநில அரசால் எந்தவிதமான முயற்சிகளையும் செய்ய முடியவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் தாய்மொழியான தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எப்போதும் ஒலிபரப்புகிறோம். முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் கோரிக்கையான தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் வைத்த கோரிக்கையை, முதல்வர் விஜய், சபாநாயகரிடம் உறுதியாக பேசி எங்கள் கருத்துகளை ஆளுநரிடம் உறுதியாக தெரிவித்தோம்.
அண்ணா உருவாக்கிய மாநில கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்து, 4 ஆண்டுகளாக ஆளுநருடன் சண்டை போட்டு அவர் வெளிநடப்பு செய்யும் நிகழ்வு இந்த முறை நடக்காமல், ஆளுநர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நாங்கள் எப்போதும் மாநில கொள்கையில் உறுதியாக இருப்போம். அது ஆளுநராக இருந்தாலும் சரி, டெல்லி தலைமையாக இருந்தாலும் சரி. திமுகவின் கொள்கையும், எங்களின் கொள்கையும் அண்ணாவின் கொள்கைதான். நம்மிடம் வேறுபாடு கிடையாது. கொள்கையில் உயிரைவிட உறுதியாக இருப்போம். எ.வ.வேலு (திமுக): சட்டசபை சபாநாயகருக்கு கட்டுப்பட்டது.
நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. உறுப்பினர் சிவசங்கர் குற்றச்சாட்டு வைக்கவில்லை. பரீசிலனையாகத்தான் சொல்கிறார். ஆளுநர் உரையின் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பின்னர் தமிழில் சபாநாயகர் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து இறுதியாக தேசிய கீதம் பாடப்படும். ஆளுநர் ரவி, மாநில உரிமைகளை பறிக்கின்ற வகையில் பல்வேறு குளறுபடிகள் சட்டசபையில் நடந்தன. அப்போது இருந்த எங்கள் முதல்வர் தீர்மானம் மூலம் நிறைவேற்றினார். அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். நேற்று (நேற்று முன்தினம்) நடந்த ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது வரவேற்கத்தக்கது.
ஆனால் அதேநேரத்தில் இறுதியாக பாடப்பட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு ஒரு முறையும், இறுதியாக ஒரு முறையும் பாடப்பட்டது ஏன்?. இப்போது 2 முறை பாட சொல்வார்கள். பிறகு 3, 4 முறை பாடவேண்டும் என்பார்கள். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: ஒருமுறை அல்ல. இரு முறை அல்ல. எத்தனை முறை பாட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எ.வ.வேலு (திமுக): நீங்கள் கொடுத்த நிகழ்ச்சி குறிப்பேட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், இறுதியாக தேசிய கீதமும்தான் இருக்கிறது. அதனைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
அவை முன்னவர் செங்கோட்டையன்: இதனை அவைக்குறிப்பில் இடம்பெற செய்யக்கூடாது.சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: ஏற்கனவே அவைக்குறிப்பில் உள்ள செய்திகளையும், மக்கள் அறிந்து உணர்ந்திருக்கிற பத்திரிகை செய்திகளையும் இங்கே நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறிப்புகளையும் பற்றி பேசுவதில் தவறு இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
மேஜையை தட்டுங்கப்பா… சபாநாயகரின் ரியாக்சன்
சட்டப்பேரவையில் முதல்வர் அல்லது எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் பேசும்போது அந்தந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மேஜையை தட்டி அதை வரவேற்பது வழக்கம். ஆனால், தற்போது தவெக உறுப்பினர்கள் பலரும், அக்கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் பேசும்போது எந்த ரியாக்சனும் காட்டாமல் அமைதியாக இருக்கின்றனர். நேற்றுகூட மேகதாது பிரச்னை தொடர்பான தனி தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் விஜய் பேசும்போது தவெக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். இதனால், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வர் பேச, பேச தனது இருக்கையின் மேஜையை தட்டினார். இதைப்பார்த்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டினர்.
அமைதியாக இருக்கும் முதல்வர் விஜய்: பதில் சொல்லும் ஆதவ், ராஜ்மோகன்
சட்டப்பேரவையில் நேற்று திமுக சார்பில் உறுப்பினர்கள் சிவசங்கரன், ஆஸ்டின் ஆகியோர் பேசும்போது, தவெக அரசு மீதும், தவெக தேர்தல் அறிக்கையை செயல்படுத்த வேண்டும், எந்த பிரச்னைக்கும் முதல்வர் விஜய் பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார். நாட்டு மக்களுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். ஆனாலும், சட்டப்பேரவையில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முதல்வர் விஜய் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், செங்கோட்டையன், மரியவில்சன் ஆகியோர் பதில் அளித்தனர். சில கேள்விகளுக்கு சபாநாயகரும் பதில் அளித்தார். வழக்கமாக, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி பற்றி குறை சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது பெரும்பாலும் முதல்வர்கள் தான் பதில் அளிப்பார்கள். ஆனால், முதல்வர் துறை பற்றி கேள்வி எழுப்பினால் கூட முதல்வர் விஜய் பதில் அளிக்காமல், அமைச்சர்களை வைத்து பதில் அளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
