சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: தலைமை செயலகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, துறை சார்ந்த அமைச்சரிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் மனு அளிக்க கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை காவல்துறை துணை கொண்டு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி துன்புறுத்தி வெளியே துரத்தப்படுகிறார்கள்.
முதல்வர் விஜய், மாற்றுத்திறனாளிகள் சமூகம் எவ்வித கட்டுப்பாடு இன்றியும், நிபந்தனை இன்றியும், சிரமமின்றி கோட்டைக்கு உள்ளே சென்று துறை சார்ந்த அமைச்சர்களிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் நேரில் சந்தித்து தங்களின் மனு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் குடியிருப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும். தாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாதாந்திர உதவித் தொகை ரூ.2500 வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
