விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பரிதவிப்பு: பிஸ்கட் தந்து சமாளித்த ஆசிரியர்கள்

 

விளாத்திகுளம்: விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் காலை உணவு இல்லாததால் 40 குழந்தைகள் பரிதவித்தனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, பள்ளிக்குழந்தைகள் காலை பசியோடு வருவதை அறிந்து அவர்களது பசியை போக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் விளாத்திகுளம் யூனியனில் காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பரிதவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் மூலம் சுமார் 267 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் கணக்கர், சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றி வருகின்றனர். திமுக ஆட்சியில் இருக்கும் வரை காலை உணவுத்திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் எந்தக் குறையும் இல்லை.

இந்தப் பள்ளியில் நேற்று காலை வழக்கம்போல் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளிக்கு வந்த சுமார் 40 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறந்தது முதலே இந்த பிரச்னை நீடித்து வருகிறது. குறைவான உணவை வைத்துக்கொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் பரிமாறுவது, ஒரு சில குழந்தைகளுக்கு உணவு இல்லை என தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, பள்ளியில் காலை உணவு சாப்பிட வரும் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை, காலை 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்படும், மாணவர்களின் எண்ணிக்கை துறை சார்ந்த ஆப்-பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் காலதாமதமாக வரும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முடியவில்லை என கூறினர். அதே நேரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் விசாரித்த போது, காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் சரியான நேரத்தில் தான் வருகின்றனர்.

ஆனால் பள்ளிகள் திறந்தது முதல் குறைவான அளவில் உணவு தயாரிக்கப்படுவதால் மாணவர்களுக்கு நிறைவான உணவு கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாது ஒரு சில மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதன் காரணமாக நேற்று காலை சரியான நேரத்திற்கு வந்த 40 மாணவர்களுக்கு காலை உணவு கிடைக்கவில்லை. உணவு கிடைக்காத மாணவர்களுக்கு அவர்களின் வகுப்பு ஆசிரியர்கள் பிஸ்கட்கள் வழங்கி சமாளித்தனர் என்றனர். பெரும் வரவேற்பை பெற்றுள்ள காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: