சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள், எம்பிக்கள் குழுவாக ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

 

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காவிரியின் மீதான நம் உரிமையை பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இதை திமுக சார்பாக நாங்கள் மனதார வரவேற்கிறோம். 2021ம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது’ என்று எங்கள் தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் ஒரு கடிதம் எழுதினார். இதனையடுத்து, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, `மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதையே ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம். கடந்த 2022-23 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதை கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது. அன்று `தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என்று எங்கள் தலைவர் பேசினார்.

மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்கு கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக, அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை மாதம், 2022ம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி குழுவினர், ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், திமுக அரசின் எதிர்ப்பால் மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுக தீர்வு எட்டப்பட்ட பிறகுதான் அணை கட்ட அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார். மத்திய நீர்வள ஆணையம், 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்கு சில முக்கியமான நிபந்தனைகளை தெரிவித்திருந்தது.

அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார். எனவே, இந்த அரசு இவற்றைல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாக பெற்றுத் தர வேண்டும். இறுதியாக, திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் முதல்வருக்கு வைக்க விரும்புகிறேன். இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்த தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம். இந்த தீர்மானத்தை கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாக சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்கு திமுக தயாராக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளை கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார். மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்கு கடுமையாக வலியுறுத்தியது.

Related Stories: