சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் குன்னம் சிவசங்கர் (திமுக) பேசியதாவது: முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர் அட்லி, அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பல சிறந்த திரைப்பட காட்சிகளை தொகுத்து ‘ஹிட்’ கொடுப்பார். அதேபோல்தான் ஏற்கனவே ஆட்சியில் சிறப்பாக இருந்த திட்டங்களை வேறு வடிவம் பூசி ஆளுநர் உநீங்கள் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள். ஒரு ஆட்சி மக்களுக்கான பாதுகாப்பான ஆட்சியாக இருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாத அவகாசம் என்பது கிடையவே கிடையாது. நாங்கள் இன்னும் போராட்டக் களத்துக்கு வரவில்லை.
போராட்டக் களத்தில் மக்கள்தான் இருக்கிறார்கள். எந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ? அவர்கள் தான் போராடுகிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்விக்கான பதில் இந்த ஆளுநர் உரையில் இல்லை. ஆளுநர் உரை என்பது உங்களுக்கும், மத்திய அரசுக்கும் இணக்கமான உறவு ஏற்பட்டு இருக்கிறது என்ற வெளிப்பாடாகத்தான் அமைந்திருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது என்ற செய்தி. உங்களுக்கு வாக்களித்தவர்கள் இதுபற்றி பேசக்கூடிய நிலை வரும். நல்லவைகளை வரவேற்போம்.
அல்லவைகளை சுட்டிக்காட்டுவோம். இதுதான் எதிர்க்கட்சியின் கடமை. உங்களுக்கும், எங்களுக்கும் வாக்கு வித்தியாசம் 17 லட்சம்தான். எங்களையும் நம்பிதான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களின் குரலாக நாங்கள் செயல்படுவோம். காலங்கள் மாறும், உங்கள் காட்சிகள் மாறும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் ராஜ்மோகன்: முதல்வர் தமிழ் திரையுலகில் இருந்து திரைப்படத்தை விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தார். ஆனால் அரசியலில் இருக்கும் எம்எல்ஏ சிவசங்கர், எடிட்டிங் என்கிறார், டிரெய்லர் என்கிறார், அட்லியை பற்றி பேசும் போதெல்லாம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சட்டசபைக்கும், அட்லிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
ஜனநாயகத்தின் பெரிய பலமே எதிர்கட்சிதான். அதே சமயம், விதண்டாவாதமாக சில விஷயங்களை திரித்து, வம்புக்காக பேசுவது எப்படி சரியாக இருக்கும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்கிறார். சட்டசபையை பாருங்கள். காலங்களும், காட்சிகளும் மாறிவிட்டது. அன்றும், இன்றும், என்றும் தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் ஒரு குணம் இருக்கிறது. மாநில உரிமை, தமிழ் மொழி எங்கள் உயிரினும் மேலானது. தமிழ் எங்கள் பேச்சு, மூச்சு, தமிழ்தான் எங்களுடைய பிரதான உயிர், இலக்கு. ஆளுநர் உரையின் போது எது முதலில் பாடப்பட வேண்டும் என வரும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து தான் என மத்திய அரசின் சுற்றறிக்கையை மீறி பாடப்பட்டது.
மேகதாது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் பேசுவோம். சிவசங்கர் (திமுக): அட்லியை பற்றி மட்டுமல்ல புட் சட்னியை பற்றியும் பேசலாம். நான் எல்லோரையும் பாலோ செய்தால்தான் அரசியலில் இருக்க முடியும். பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய வசனம் எல்லோராலும் பேசப்படுகிறது. திரைப்படத்தை ரசித்து, அதில் இருக்கும் சிலவற்றை பற்றி பேசுவதில் தவறு இல்லை. சட்டசபையில் பேசுகிறதை பொதுமக்கள் பார்ப்பார்கள். வரலாற்றில் இடம்பெறக்கூடிய செய்தி. ஆளுநர் உரை என்பது உங்களுக்கு உகந்ததாக இருக்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பு வேறு. ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எதிர்க்கட்சி மேடையில் நின்று பேசும் வசனம் வேறு. ஆளுங்கட்சியாக நின்று செயல்படுத்துவது என்பது வேறு. நாங்கள் இன்னும் சில விஷயங்களை பற்றி பேசாமல், பொதுக்கூட்டங்களில் பேசியதற்கு பதில் சொல்லாமல் நிற்கிறோம். சட்டசபையில் என்ன பேச வேண்டுமோ அதை பேசுகிறோம். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அதையும் பேச வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டாம். ஆக்கப்பூர்வமான ஆட்சி தருவதற்கு என்ன பணியோ அதை பாருங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
