கோவை, ஜூன் 18: கோவையில் இயக்கப்படும் தனியார், அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று திடீரென சிறப்பு சோதனை நடத்தினர். கோவை சரக வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் நடந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் சிங்காநல்லூர், கணபதி, பீளமேடு, காந்திபார்க், டவுன்ஹால், செல்வபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் சோதனை செய்தனர். இந்த சோதனையில், அரசு, தனியார் பஸ்கள் என மொத்தம் 34 பஸ்களை ஆய்வு செய்ததில் 16 பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 16 பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்களை அகற்றினர். ஒவ்வொரு பஸ்சுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
