சூலூர், ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கிட்டம்பாளையம் ஊராட்சியில் வெறும் எம் சாண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட கழிவு நீர் தொட்டி நேற்று பெய்த சாதாரண மலைக்கு கரைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் ஏடி காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனித்தனியாக செப்டிக் டேங்க் கட்டிக்கொள்ள வசதி இல்லாததால் அரசு சார்பில் ஏ.டி காலனி பகுதியில் அனைவருக்குமான பொது செப்டிக் டேங்க் கட்டப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன் உள்ளூர் ஒப்பந்ததாரர் ஒருவர் மூலமாக இந்த செப்டிக் டேங்க் கட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 20 தினங்களுக்கு முன்பு புதிய செப்டிக் டேங்க் இதேபோல் இடிந்து விழுந்த நிலையில் மீண்டும் குத்தகைதாரர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் புதுப்பித்து கான்கிரீட் போட்டு உள்ளார். கான்கிரீட் போட்டு 10 நாட்கள் ஆன நிலையில் நேற்று பெய்த சாதாரண மழையில் செப்டிக் டேங்கில் மேல் போடப்பட்ட கான்கிரீட் கரைந்து விழுந்தன. மிகவும் தரம் இன்றி வெறும் எம் சேண்ட் மட்டுமே பயன்படுத்தி செப்டிக் டேங்க் கட்டப்பட்டு இருப்பதாக அந்த பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய ஆட்சியில் அரசு காண்ட்ராக்டர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைத்த நிலையில் மிகவும் மோசமாக பணிகளை செய்துள்ளது அப்பகுதி பொது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த செப்டிக் டேங்க்கை கட்டித்தர அரசு முன் வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
