கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. கேமரா தவறாக காட்டுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

 

கோவை, ஜூன் 15: கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ கேமரா தவறாக காட்சிகளை பதிவு செய்வதாக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கோவை-அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜி.டி நாயுடு மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தவிர, இளைஞர்கள் வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில், மேம்பாலத்தில் ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் கடந்த ஏப்ரல் மாதம் பொருத்தப்பட்டது.

இந்த ஏஐ கேமரா மூலம் அதிவேகம், ஹெல்மெட் இல்லாமை, சீட் பெல்ட் இல்லாமை, டூவீலரில் மூன்று பேர் பயணம் செய்தல் மற்றும் தவறான பாதையில் ஓட்டுதல் போன்ற 10-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்படுகிறது. மேம்பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் உள்பட பல இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, விதிமீறல் செய்யும் வாகனங்களின் எண்கள் மற்றும் அவர்கள் செய்த தவறு உடனுக்குடன் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் ஸ்பீட் ரேடார் கேமராக்கள் மூலம் கண்காணித்து அந்த வேகமும் எல்.இ.டி திரையில் தற்போது காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏ.ஐ கேமராக்கள் தவறாக காட்டுவதாக இளைஞர்கள், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தவிர, இது தொடர்பாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த கேமராக்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், சீட் பெல்ட் போட்டு இருந்தாலும் போடவில்லை என கூறி தங்களின் வாகனங்களை புகைப்படம் எடுத்து எல்.இ.டி திரையில் காட்டுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் சென்றாலும் 80 மற்றும் 90 கி.மீ வேகத்தில் செல்வதாக காட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தவிர, இதற்கு அபராதம் விதிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் 44 ஏ.ஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதன்மூலம், வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது. தற்போது சோதனை அடிப்படையில் கேமராக்கள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு எல்.இ.டி திரையில் காண்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வரை கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமாக யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. தற்போதைய சோதனையில் கேமராவில் சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்து இருப்பதால், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் கேமரா செயல்படும்.

பின்னர், ஏ.ஐ கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படம், வீடியோக்கள் அடிப்படையில், வாகன எண் அடையாளம் காணப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் ‘வாஹன்’ மென்பொருளுடன் இணைக்கப்பட்டு, வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு அபராதம் நேரடியாக அனுப்பப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: