உயர்கிறது டீசல் விலை…! கழுத்தை நெரிக்கிறது 18 சதவீத ஜிஎஸ்டி வரி…! முடங்குகிறது லாரி தொழில்…! 25 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

 

கோவை, ஜூன் 16: டீசல் விலை அபரிமிதகமாக உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி காரணமாக லாரி தொழில் முடங்கியுள்ளது. 25 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நம் நாட்டில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இன்னொரு இடத்திற்கு கொண்டுசென்று, சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது லாரி போக்குவரத்து தொழில். உணவுப்பொருட்களில் துவங்கி, பெரிய இயந்திரங்கள் வரை எல்லா வகையான பொருட்களையும் கொண்டுசெல்ல லாரி தொழில் முக்கியமானதாக உள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன. இத்தொழிலை நம்பி, நேரடியாக 2.50 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 14.50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர்.
ஒரு காலத்தில் மிக லாபகரமான தொழிலாக இருந்த லாரித்தொழில், தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் தொகை, ஜி.எஸ்.டி வரி, சுங்க கட்டணம், டீசல் விலை, விபத்து நஷ்டஈடு என பல வகையிலும் இத்தொழிலுக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அடி மேல் அடி விழுவதால், இத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்குகிறது. முன்பெல்லாம் லாரி டிரைவர் தனது டிரைவிங் லைசென்சை புதுப்பிக்காமல் விட்டுவிட்டால், அபராத தொகையை செலுத்தி, புதுப்பித்துக்கொள்ளும் வசதி இருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, புதியதாக டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டியுள்ளது. இதற்கு பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

இதனால், ஏராளமான லாரி டிரைவர்கள், லைசென்ஸ் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இத்தொழிலை நம்பி, புதிதாக டிரைவர்கள் யாரும் வருவதில்லை. ஏற்கனவே, டிரைவர்களாக இருக்கும் நபர்களை நம்பியே இத்தொழில் இயங்குகிறது. முந்தைய காலங்களில், புதியதாக லாரி வாங்கி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது, பதிவு கட்டணமாக வெறும் 800 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ரூ.22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. இன்சூரன்ஸ் தொகை, வாகன மதிப்புக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என இருந்தது. ஆனால், தற்போது ரூ.1.50 லட்சம் வரை அதிகரித்து விட்டது.

வாகன பதிவின்போது, சாலைவரி, ரூ.1 லட்சம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. லாரி டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்கும்போது அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த நெருக்கடி காரணமாக, லாரி பராமரிப்பு என்பது பெரும் சுமையாகிவிட்டது. சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. டீசல்விலை நாள்தோறும் அதிகரிக்கிறது. அதிகபாரம் எனக்கூறி அபராதம் பல மடங்கு விதிக்கப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடி காரணமாக, லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தொழிலில், நெருக்கடி அதிகரிப்பதால், டிரைவர், கிளீனர்கள் மாற்று வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.

இதனால், லாரிகள் ஓட்டமின்றி, முடங்கி கிடக்கிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதுபற்றி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி, லாரி தொழிலுக்கு பெரும் இடையூறாக உள்ளது. ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது, இத்தொழிலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் 855 சுங்கச்சாவடி உள்ளது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடி உள்ளது. காலாவதியான பல சுங்க சாவடிகளில் இன்னமும் சட்ட விரோதமாக சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள்.

டீசல் விலை அன்றாடம் உயர்வது இத்தொழிலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை ரத்து செய்துவிட்டு, அரசே இப்பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைவிட இன்ஜின் ஆயில் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. இதையும், கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். புதிதாக லாரி வாங்கி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது அதற்கான கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதை, அடியோடு குறைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நெருக்கடி காரணமாக லாரிகளின் ஓட்டம் 50 சதவீதம் குறைந்துவிட்டது.

லாரி போக்குவரத்து நல்லமுறையில் இயங்கினால்தான், பல்வேறு வகையான பொருட்களை, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எளிதாக கொண்டுசெல்ல முடியும். அந்த பொருட்களின் விலையும் குறையும். இல்லையேல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், ஏழை, அடித்தட்டு மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் லாரிகளை இயக்குவது, அதை பராமரிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது.

கடந்த மே மாதம் ரூ.92.88க்கு விற்கப்பட்ட டீசல் இம்மாதம் இன்றைய நிலையில் ரூ.100.06க்கு விற்கப்படுகிறது. இதனால், லாரி வாடகையை உயர்த்தவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் (ஜூன் 15ம்தேதி) 25 சதவீதம் லாரி வாடகையை உயர்த்த மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவுசெய்து, அமல்படுத்திள்ளது. இந்த கட்டண உயர்வு கோவையிலும் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அது ஏழை மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, லாரி தொழில் நெருக்கடியை போக்க, ஒன்றிய அரசும், மாநில அரசும் முன்வர வேண்டும். இவ்வாறு முருகேசன் கூறினார்.

 

Related Stories: