மேட்டுப்பாளையம், ஜூன் 16: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் காந்தராஜ் (28). இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆக்டிங் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு தனது வீட்டில் உறங்கியுள்ளார். நள்ளிரவு வேளையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் அரிவாளால் காந்தராஜை கை, கால், முகம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த காந்தராஜை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக காந்தராஜ் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணையில் கடந்த ஆண்டு சிறுமுகையில் மினி பஸ் டிரைவரும்,முன்னாள் நண்பருமான ஆண்ட்ரூ அரவிந்த்(31) என்பவரை காந்தராஜ் மதுபோதையில் அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.இப்புகாரில் காந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த ஆண்ட்ரூ அரவிந்த் (31) மற்றும் அவரது நண்பரான மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த பிளாக் பாபு (35) ஆகியோர் மது அருந்திவிட்டு காந்தராஜ் வீட்டிற்கு சென்று அவரை தாங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற அரிவாளால் முகம், கை, கால் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ஆண்ட்ரூ அரவிந்த் மற்றும் பிளாக் பாபு ஆகிய இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் சிறுமுகை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
