கோவை,, ஜூன் 18: கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் வருவாய் அலுவலர், நிர்வாக அலுவலர், கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர், உதவியாளர்கள் என 11 பேர் நிர்வாக நலன் கருதி மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி உதவி பொறியாளர்கள், இளம் பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தேர்ச்சி திறன் உதவியாளர்கள் ஆகியோர் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, மொத்தம் 21 பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, மத்திய மண்டலம் குடிநீர் விநியோக பணிப்பொறுப்புகளில் இருந்து இளம் பொறியாளர் சக்திவேல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாநகராட்சியில் உள்ள இளநிலை உதவியாளர்கள், வரி வசூலர்கள், பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மொத்தம் 86 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதே போல் துப்புரவு அலுவலர் மற்றும் துப்புர ஆய்வாளர்கள் 21 பேரும் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். பணிமாறுதல் செய்தவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
