திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் கொத்து, கொத்தாக மீன்கள் செத்து மிதக்கிறது. இதற்கான காரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை நம்பி 200 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் உள்ளனர். ஏரிப்பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தாலும் கடும் கோடை வெயில் காரணமாகவும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக ஏரியில் உள்ள மீன்கள் குவியல், குவியல்களாக செத்து கரை ஒதுங்கி வருகிறது உயிரிழந்த மீன்கள் அழுகி துர்நாற்றமும் வீச தொடங்கியதால் மூக்கை பிடித்தபடி மக்கள் செல்லக்கூடிய நிலையும் உள்ளது.
‘’தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் உள்ளூர் மீனவர்கள் படகு மூலம் மீன் பிடிக்க செல்லும்போது சேரும் சகதியாக மாறி கலங்கி போவதால் சேறு வயிற்றுக்குள் சேர்ந்து மூச்சுத் தினறல் ஏற்பட்டு மீன்கள் உயிரிழந்திருக்கக் கூடும்’’ என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் குறைவால் நீர் வாழ் தாவரங்கள் வெப்பம் தாங்காமல் உயிரிழக்கும் நிலைமை ஏற்படுகிறது. எனவே உயிரிழந்த மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
