ஈரோடு: ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, புதிய நவீன இலகு ரக எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு நேற்று முதல் முறையாக இயக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேரடியாக இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்:22650) பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு புதிய பொலிவுடன் நேற்று இயக்கப்பட்டது. இந்த எல்எச்பி பெட்டிகள் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிகள் விபத்துக்காலங்களில் சிதைவதை தடுக்கும் அன்டி டெலஸ்கோபிக் வசதி கொண்டவை. எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையிலும், அதிக பயணிகள் இருக்கை வசதியுடன் உள்ளது. புதிய எல்எச்பி பெட்டிகளுடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டதால், பயணிகள் உற்சாகமாக நேற்று பயணித்தனர். இதேபோல், சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 13ம் தேதி எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
