‘இன்ஸ்டா’ வாலிபருடன் காதல் இளம்பெண் ஆணவக் கொலை: அடித்துக் கொன்ற அண்ணன், தாய் கைது

 

தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் அண்ணனே அடித்துக் கொன்று ஆணவப் படுகொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்குமயிலோடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செல்வம் – எஸ்தர் தம்பதியினர். இவர்களது மகன் சிவஞானம் (22), மகள் அபி செல்வி (19). செல்வம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மகன் சிவஞானம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

மகள் அபிசெல்வி பிளஸ்2 படித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஹரி பிரசாத் பட்டியல் இனத்தை ேசர்ந்தவர். அபி செல்வி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர். எனினும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் அபி செல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாயார் எஸ்தருக்கு தெரிய வரவே அவர்கள் அபி செல்வியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அபி செல்வி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அபி செல்வி, ஹரி பிரசாத்துடன் மீண்டும் காதலை தொடர்ந்துள்ளார். இதனால் சிவஞானம் மற்றும் அவரது தாய் எஸ்தர் ஆகியோர் அபி செல்வி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிவஞானம், அபி செல்வியிடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த சிவஞானம், அபி செல்வியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைத்தொடர்ந்து அபிசெல்வி, தற்கொலை செய்து கொண்டது போல் காட்டுவதற்காக அவரது உடலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தொங்க விட்டுள்ளனர்.

அதன் பிறகு கயத்தாறு காவல்நிலையத்திற்கு போன் செய்து, மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போதும் சிவஞானம் மற்றும் அவரது தாய் எஸ்தர் ஆகியோர் அபி செல்வி தற்கொலை செய்து கொண்டதாகவே கூறியுள்ளனர். அதன்பிறகு அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அபி செல்வி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து கயத்தாறு போலீசார், அபி செல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அபி செல்வியை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணனே அடித்துக் கொன்று ஆணவப் படுகொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாவட்டங்களில் தலைதூக்கும் ஆணவக் கொலைகள்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27). இவர் சென்ைனயில் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக கவினின் காதலியான சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் கடந்த மே 29ம் தேதி கைதானார். கவின் ஆணவக்கொலைக்கான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்திருப்பது தென் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.

கொலையை மறைத்த போலீசார்
அபிசெல்வியின் மரணத்தில் ஆரம்பம் முதலே சந்தேகம் இருந்தது. ஆனால் போலீசார் நேற்று முன்தினம் உடலை கைப்பற்றிய போது அவர் ரசாயன பவுடரை குடித்து விட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். உயிருடன் இருக்கும் போது ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டால், அவர் கழுத்தில் காயங்கள், எழும்பு முறிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் ஆணவக் கொலை என்றால் விவகாரமாகி விடும் என்பதால், போலீசார் இந்த வழக்கை முதலில் தற்கொலை வழக்கு எனக் கூறி மூட முயற்சித்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது அப்பட்டமாக தெரியவந்தது. அதன் பிறகே தற்கொலை என்பதை ஆணவக் கொலை என போலீசார் மாற்றி தாய், அண்ணனை கைது செய்தனர்.

வேறு யாரும் உடந்தையா?
அபிசெல்வி மரணம் அடைந்தவுடன் அவரை தாய், சகோதரர் இருவரும் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இருவர் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா, இருவரும் சேர்ந்து பெண்ணின் உடலை தூக்கில் தொங்க விட முடியுமா? வேறு யாரும் இதற்கு உடந்தையா என்பது குறித்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: