நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு; சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்: சென்னை முழுவதும் மருத்துவச் சேவைகள் முடங்கும் அபாயம்

 

* புதிய வருகைப்பதிவு செயலி முறையால் சம்பளம் பறிபோனதாகக் கண்ணீர் குமுறல்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் 800-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான 800-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு இன்று அதிரடி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று, சென்னை பெருவெள்ளம் போன்ற மிக மோசமான பேரிடர் காலங்களில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்களப் பணியாளர்களாக நின்று உழைத்த தங்களுக்கு, கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பணி பாதுகாப்போ அல்லது முறையான ஊதிய உயர்வுகளோ வழங்கப்படவில்லை என்று கூறி இப்போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மற்றும் தரவு உள்ளீட்டாளர்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சம்பளக் கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் கொண்டு வந்துள்ள மொபைல் ஆப் மூலமான புதிய வருகைப்பதிவு முறையின்படி, பணி நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் தாமதமாகப் பதிவு செய்தாலும், ஒரு நாளின் பாதியளவு சம்பளம் உடனடியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. ”கடந்த ஒரு மாதமாக எங்களுக்குச் சம்பளமே வரவில்லை. கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டும், வெளியூர்களில் இருந்து வந்து தங்கியும் மக்கள் சேவைக்காக உழைத்து வருகிறோம். ஆனால், இந்த மாதம் பலருக்கு வெறும் 5 நாட்களுக்கான சம்பளம் மட்டுமே கணக்கில் போடப்பட்டுள்ளது.

ஒரு மாத முழு உழைப்பிற்கு வெறும் 500 ரூபாயும், 3000 ரூபாயும் மட்டுமே வங்கி கணக்கில் ஏறியுள்ளது. இதை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது?” எனப் பெண் பணியாளர்கள் கதறினர். “தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செவிலியர்களுக்கு 30,000 முதல் 35,000 ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்தாலும், மாநகராட்சி எங்களுக்கு வெறும் 18,000 முதல் 19,000 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. 10 வருடங்களாக உழைப்பவர்களுக்கும், நேற்று பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஒரே சம்பளம்தான்.

டிகிரி முடித்த லேப் டெக்னிஷியன், டேட்டா என்ட்ரி பணியாளர்களுக்கு 13,000 முதல் 15,000 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது. படித்த எங்களுக்கு இங்கு எந்த மதிப்போ, பாதுகாப்போ இல்லை” எனத் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். மேலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி, தகுதிக்கேற்ற முறையான ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலுள்ள கடுமையான புதிய வருகைப்பதிவு முறையைக் கைவிட வேண்டும்; பிடித்தம் செய்யப்பட்ட சம்பளப் பாக்கியை முழுமையாக வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னை மாநகராட்சியின் கீழ் 250-க்கும் மேற்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

தற்போதைய சூழலில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மொத்தமாகப் பணிகளைப் புறக்கணித்து ரிப்பன் மாளிகையில் குவிந்துள்ளதாலும், மேலும் பல பணியாளர்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருப்பதாலும், ஏழை எளிய மக்களுக்கான தினசரி மருத்துவச் சேவைகளும், தடுப்பூசி முகாம்களும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. “மக்களுக்கு வெயில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எங்களை ஓடி ஓடி முகாம்களில் வேலை செய்யச் சொல்கிறார்கள். ஆனால் அதே வெயிலில் சுழலும் எங்களைப் பற்றி அதிகாரிகள் கவலைப்படுவதில்லை.

அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைப் பணி நேரம் முடிந்துவிட்டது என்று எங்களால் பாதியில் விட்டுவிட்டு வர முடியாது. அப்படி மனிதநேயத்தோடு கூடுதல் நேரம் உழைக்கும் எங்களுக்கு, அதிகாரிகள் ஏன் இரக்கம் காட்டுவதில்லை?\\” என்று பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போராட்டம் தொடங்கி பல மணி நேரத்தைக் கடந்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளோ இதுவரை பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தங்களது கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும் மருத்துவப் பணியாளர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Related Stories: