பெரம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட அசாம் வாலிபர் தலை செங்கல்பட்டில் மீட்பு: உடல் பாகங்கள் தேனாம்பேட்டையில் மீட்பு

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட அசாம் வாலிபரின் தலை செங்கல்பட்டிலும், உடல் பாகங்கள் தேனாம்பேட்டையிலும் மீட்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை, கை, கால் இல்லாமல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட சடலம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அது அசாம் வாலிபர் அமீர் அலியின் சடலம் என்பது தெரிந்தது. அவரது மனைவி ரோகிமா தனது கள்ளக்காதலன் அஷ்ரப்புடன் சேர்ந்து கணவனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றது அம்பலமானது. உடலை பெரம்பூர் ரயில் நிலைய 4வது பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். கை கால்கள் அடங்கிய பையை, தேனாம்பேட்டையில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். தலையை செங்கல்பட்டு பகுதிக்கு சென்று புதைத்து விட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரோகிமாவின் கள்ளக்காதலன் அஷ்ரப் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருப்பதற்கு கணவன் இடையூறாக இருப்பார் என்பதால், அவரை ெகான்றதாக ரோகிமா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு பெரம்பூர் இருப்பு பாதை போலீசாரிடமிருந்து ஓட்டேரி போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே பெரம்பூர் ரயில் நிலையத்தில் அமீர் அலி உடல் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் ஓட்டேரி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் அமீர் அலியின் தலை தாமரைக் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

தாமரைக் குளத்தின் சேற்றில் சுமார் 2 அடிக்கு கீழ் அவரது தலை செருகி வைக்கப்பட்டிருந்தது. அதனை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதே போன்று தேனாம்பேட்டை பகுதியில் ரோகிமா வசித்த ஹவுசிங் போர்டு அருகே பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்ட அமீர் அலியின் கை மற்றும் கால்களையும் போலீசார் மீட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரோகிமா, அஷ்ரப் மீது கொலை வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எலி செத்ததாக சமாளிப்பு
ரோகிமா தனது கணவரை கொலை செய்துவிட்டு, 2 நாட்களாக அவரது உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும், அதுகுறித்து ரோகிமாவிடம் அக்கம் பக்கத்தினர் கேட்டப்போது எலி செத்து கிடந்தாகவும், அது எங்கு செத்து கிடக்கிறது, என தெரியாததால் அப்புறப்படுத்த முடியவில்லை, என சமாளித்துள்ளார்.

மாயமானதாக முகநூலில் பதிவு
தனது கணவரை கொலை செய்த பின், ரோகிமா தனது கணவர் செல்போனில் அவரது முகநூலில் சென்று தனக்கு வாழ பிடிக்கவில்லை. தன்னை யாரும் தேட வேண்டாம், என்ற ரீதியில் இந்தியில் அவரது கணவர் பதிவிட்டது போல் பதிவிட்டுள்ளார். அவ்வாறு பதிவிட்டால் உறவினர்கள் யாரும் அவரை தேடி தன்னிடம் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும், மன உளைச்சலில் எங்கேயோ சென்றுவிட்டார் என சமாளித்து விடலாம், என யோசித்து இவ்வாறு பதிவிட்டது தெரியவந்துள்ளது.

வீடியோவை பார்த்து ரசித்த மனைவி
தனது கணவரை கொலை செய்த ரோஹிமா, அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் தனது கணவரின் உடலின் அருகே நின்று செல்பி எடுத்துள்ளார். மேலும் அடிக்கடி அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளார், என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோகிமா செல்போனில் உள்ள வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ந்துள்ளனர்.

Related Stories: