திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் கூட்டு பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் போக்கோவில் கைது செய்யப்பட்டனர். திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரும் தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம்தேதி சிறுமி திடீரென மாயமானார். இதுதொடர்பாக பாலக்கரை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் மாயமான அன்று ரோட்டில் நடந்து சென்ற அந்த சிறுமியை ஒரு கும்பல் அவர்களுடன் அழைத்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் பாலக்கரை பகுதியில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் காவல் நிலையத்துக்கு உறவினர்களை வரவழைத்தனர். அப்போது உறவினர்களுடன் செல்ல சிறுமி மறுத்து விட்டார். இதனால் திருச்சியில் உள்ள காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்த காப்பாளர்களிடம், அந்த சிறுமி தன்னை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக குழந்ைதகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு காப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காப்பகத்துக்கு நேரில் வந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விசாரித்தனர். அதில் 9 பேர் கொண்ட கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து 7 சிறுவர்கள் மற்றும் அளுந்தூரை சேர்ந்த மோகன்ராஜ் (19), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கிஷோர் (20) ஆகிய 9 பேரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
