பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு; 30 நாட்களிலேயே திணறல் நீடிக்குமா தவெக அரசு..? தமிழிசை டவுட்

மதுரை, ஜூன் 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘717 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் மனமகிழ் மன்றம் திறந்து தான் உள்ளது. கடை மூடிய இடத்தில் தனியார் பார்கள் திறக்கப்படுவதாக செய்திகள் வருகிறது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பெண்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. விஜய்யின் படம் 100 நாட்கள் ஓடியது என பெருமையாகப் பேசலாம். இந்த ஆட்சி 30 நாட்களிலேயே திக்கித் திணறி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்சி 5 வருடம் நீடிக்குமா? ஆட்சி நடத்துவதை பொறுத்து தான் உள்ளது. அதிமுகவின் எதிர்காலம் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அந்தந்த கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இன்னொரு கட்சியில் இருந்து பிள்ளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல், ஆட்சி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிமுகவினரிடம் பேரம் பேசப்பட்டதா, அது என்ன பேரம் என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் பேரம் உள்ளது. இவ்வாறு கூறினார்.

‘அவருக்கு இருட்டுதான் பிடிக்கும் வெளிச்சம் பிடிக்கவே பிடிக்காது’
‘‘மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையே தொடரும் எனச் சொல்லியுள்ளார். அவர் அப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை. அவருக்கு வெளிச்சம் பிடிக்காது, மின்வெட்டு, இருட்டு தான் பிடிக்கும். விசில் சத்தம் சற்று சத்தமாக கேட்டு விட்டதற்காக, பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம்’’ என்று தமிழிசை தெரிவித்தார்.

‘அண்ணாமலையிடம் சென்றவர்கள் சுயநலவாதிகள்’
தமிழிசை கூறுகையில், ‘‘அண்ணாமலை இயக்கத்தில் பாஜவினர் தான் அதிகம் இணைந்திருப்பதாக கூறுகிறீர்கள். எங்கள் கட்சியில் லட்சியவாதிகள் உள்ளார்கள். சுயநலவாதிகள் தான் அவரிடம் சென்றிருப்பார்கள். தாமரையில் ஒரு இதழை கூட யாராலும் அசைக்க முடியாது. தமிழகத்தில் பாஜ எடுபடாததால், அண்ணாமலையை வைத்து அரசியல் செய்கிறது என்ற மாணிக்கம்தாகூர் கருத்துக்கு அவரையும், வன்னி அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் வேண்டுமானால் ஜோதிமணிக்கு ஒரு முகம், மாணிக்கம் தாகூருக்கு ஒரு முகம் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு முகத்தை காண்பித்துத் தான் திமுக முதுகில் குத்தினீர்கள். நாங்கள் அப்படியல்ல. ஒரே முகம்தான் பாஜ முகம். அண்ணாமலை வந்ததால் பாஜ பலம் பெறவில்லை, போனதால் பலம் இழக்கவில்லை’’ என்றார்.

Related Stories: