பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கிடந்த ஆண் சடலம் அடையாளம் தெரிந்தது மனைவியே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றது அம்பலம்

* பல பெண்களுடன் தொடர்பால் தீர்த்துக்கட்டினார்; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னை பெரம்பூரில் சூட்கேசில் கிடந்த தலை இல்லாத ஆண் சடலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவரை அவரது மனைவியே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் தீர்த்துக்கட்டிய பரபரப்பு தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கடந்த 5ம் தேதி காலை 8 மணி அளவில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பெரம்பூர் இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேஸை திறந்து பார்த்தபோது தலை, கை, கால்கள் இல்லாமல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த உடலை ரயில்வே போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில் 3 உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் போதுமான சிசிடிவி காட்சிகள் இல்லாததால் போலீசார் வெளிப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் சென்ட்ரல் மற்றும் பீச் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வரும் மின்சார ரயில்கள் மற்றும் அவை பெரம்பூருக்கு முன்பு எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கிறதோ அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் சூட்கேஸில் இருந்த உடல் ஒரு பாலித்தீன் கவரால் சுற்றப்பட்டு இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்தபோது பிரபல மருத்துவமனையின் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கவர் என்பது தெரியவந்தது.

இறந்தவரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளதால் செவிலியர்கள் அல்லது மருத்துவர்கள் யாராவது இதில் ஈடுபட்டு இருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் அந்த மருத்துவமனை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அந்த மருத்துவமனைகளில் யாராவது கடந்த சில நாட்களாக காணாமல் போய் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் ஆண்கள் பயன்படுத்தும் ஷார்ட்ஸ் ஒன்று இருந்தது.

போலீசார் அந்த துணியை கண்காணித்த போது அதில் பிராண்டட் துணிகளில் பயன்படுத்தப்படும் பார்கோடு இருந்தது. அந்த பார்கோடை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் என்ற கடையில் எடுக்கப்பட்ட துணி என்பது தெரிய வந்தது. இதனால் போலீசாருக்கு ஒரு பெரிய துப்பு கிடைத்தது. அதனை வைத்து போலீசார் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த துணியை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டு பேர் வந்து வாங்கியது தெரிய வந்தது.

அந்த பார்கோடை பில் போடும்போது அந்த துணியை வாங்கியவர்களின் தொலைபேசி எண்ணும் இருந்தது. இரண்டு பேரின் தொலைபேசி எண்ணையும் போலீசார் தொடர்பு கொண்டபோது ஒருவர் போனை எடுத்துப் பேசி உள்ளார். அவர் உயிரோடு உள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட போலீசார் மற்றொருவருக்கு போன் செய்தபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது.

அதே நேரத்தில் வழக்கின் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளோம் என்பதை உணர்ந்த போலீசார் குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணின் கால் டேட்டா ரெக்கார்டுகளை ஆய்வு செய்தினர். அதில் யார் யார் அந்த நம்பரில் தொடர்பு கொண்டு உள்ளார்கள் என தெரிந்தது. ஒரு பெண் அதிகமாக அந்த நம்பரில் பேசி இருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் நம்பருக்கு போன் செய்தால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் என வந்தது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த நம்பரில் இருந்த வாட்ஸ் அப் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த தொலைபேசி எண் லொகேஷனை போலீசார் பின்தொடந்தனர். அது தேனாம்பேட்டை, தி.நகர் போன்ற இடங்களை காண்பித்தது. இதையடுத்து தேனாம்பேட்டை மருத்துவமனை அருகே சென்ற புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் வாட்ஸ் அப்பில் அந்த பெண் வைத்திருந்த போட்டோவை காண்பித்து அங்குள்ள நபர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த பெண் அப்போலோ மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுப்பது, அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவது தெரிய வந்தது.  அந்த பெண்ணுக்கு போன் செய்தால் சந்தேகம் வந்து அந்த பெண் தலைமறைவாகி விடுவார் என்று எண்ணிய போலீசார் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளியை வைத்து அந்த பெண்ணிடம் எங்களுக்கு வீடு வேண்டும், உதவி வேண்டும் என்பது போல பேச வைத்தனர்.

அந்த பெண்ணும் வாட்ஸ்அப் காலில் பேசி நான் வருகிறேன் என நேற்று மதியம் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகே வந்துள்ளார். அப்போது சுற்றி இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். அந்த பெண்ணை ரகசிய இடத்தில் வைத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா (36) என்பதும், கணவர் அமீர் அலி (37) என்பதும் தெரிய வந்தது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்டது ரோகிமாவின் கணவர் அமீர் அலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் ரோகிமாவுக்கு அசாம் மாநிலத்தில் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டு ரோகிமா, அமீர்அலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

2022 முதல் ரோகிமா மற்றும் அமீர் அலி தேனாம்பேட்டை தாமஸ் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு ஒன்றில் வீடு எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். உயிரிழந்த அமீர் அலிக்கு வேறு சில பெண்களோடும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அவரது மனைவி ரோகிமா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ரோகிமாவுக்கு தி.நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரப் (31) என்பவர் பழக்கமாகியுள்ளார். அஷ்ரப் என்பவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கு காய்கறி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போதிலிருந்து ரோகிமா பழக்கம் ஆகி உள்ளார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததுள்ளது. ரோகிமா அசரப்பிடம் தனது கணவர் அடிக்கடி தன்னை சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அஷ்ரப் அவனை விட்டுவிட்டு என்னுடன் வந்து விடு. நாம் ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார்.

அதற்கு ரோகிமா அவனை விட்டு உன்னுடன் வந்தால் அவன் என்னை கொன்று விடுவான். பதிலுக்கு அவனை கொன்று விடலாம் என்று கூறி கடந்த 3ம் தேதி இரவு அமீர் அலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவனை படுக்க வைத்துள்ளனர். அன்று இரவு அரிவாள்மனையை எடுத்து அமீர் அலி கழுத்தை அறுத்து, அவரது உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்துள்ளனர். கை கால்களை வெட்டி ஒரு தனி பேக் செய்துள்ளனர். தலையை வெட்டி தனியாக பேக் பெய்துள்ளனர். அவரது உடம்பை தனியாக அப்போலோ கவரில் பேக் செய்து சூட்கேஸில் வைத்துள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்துள்ளனர். துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக அடிக்கடி வாசனை திரவங்களை ரோகிமா வீட்டில் தெளித்துள்ளார். 5ம் தேதி காலை 6 மணி அளவில் ரேபிடோ மூலம் ஆட்டோ புக் செய்து உடலை பெரம்பூர் ரயில் நிலையம் 5வது பிளாட்பாரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டு சென்றுள்ளனர். கை கால்கள் அடங்கிய பையை ஓடும் ரயிலில் வைத்துள்ளனர். அது எந்த ரயில், எங்கே போனது என்று தெரியவில்லை.

மேலும் தலையை செங்கல்பட்டு பகுதிக்கு சென்று புதைத்து விட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து ரோகிமாவின் கள்ளக்காதலன் அஷ்ரப் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். உடல் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் தலை எங்கு உள்ளது என்பதை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரோகிமா மற்றும் அஷ்ரப்பிடம் புளியந்தோப்பு துணை கமிஷனர் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில், அவர்கள் பெரம்பூர் இருப்பு பாதை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்களா அல்லது இந்த வழக்கு தேனாம்பேட்டை அல்லது ஓட்டேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொலையாளி சிக்கியது எப்படி?
உயிரிழந்த அமீர் அலி அணிந்திருந்த டிரவுசரில் இருந்த பார்கோடை வைத்து போலீசார் அது எந்த கடையில் வாங்கப்பட்டது, குறிப்பிட்ட அந்த பார்கோடு உள்ள டிரவுசர் எத்தனை பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எடுத்தனர். அதில் இரண்டு பேருக்கு விற்பனை செய்தது தெரிய வந்ததும் அந்த இரண்டு பேரின் செல்போன் நம்பர்களை எடுத்துப் பார்த்தபோது ஒருவர் லைவாக இருப்பதும் ஒருவர் ஸ்விட்ச்ஆப் செய்திருப்பதும் தெரியவந்தது. ஸ்விட்ச் ஆப் செய்த நம்பரை வைத்து போலீசார் அவரது மனைவியை பிடித்தனர்.

Related Stories: