காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

 

காரைக்குடி: காரைக்குடியில் நேற்றிரவு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள சேர்வார் ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானக்குமார் (50). இவரது தாயார் அந்த வீட்டின் முன்பு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் அசோக் (23), சரவணன் மகன் மணிசரண், ரமேஷ் மகன் சபரி, அமீர் ஆகியோர் டீக்கடைக்கு வந்தனர்.

அவர்கள் கடையில் பிரச்னை செய்து கொண்டு இருந்துள்ளனர். இதனை சந்தானக்குமாரின் தாயார் தட்டி கேட்டுள்ளார். அப்போது கலைந்து சென்ற 4 பேரும், மீண்டும் நேற்று இரவு 9 மணியளவில் அங்கு வந்துள்ளனர். டீக்கடைக்கு முன் நின்று, ‘இதோடு தொலைந்துபோங்கடா…’ என அவதூறாக திட்டியபடி இரண்டு பெட்ரோல் குண்டுகளை சந்தானக்குமார் வீட்டின் மீது அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளனர். இதில், வீட்டின் முன்பக்க பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இதனால், பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சந்தானக்குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: