சிதம்பரம்: சிதம்பரத்தில் இன்று காலை கட்டையால் தலையில் அடித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முதியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகர், மீதிக்குடி செங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (33). இவரது மனைவி காமாட்சி (28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீதிக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (65). இவருக்கும், காமாட்சிக்கும் பணம்-கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் விருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை, காமாட்சி வீட்டுக்கு மகேந்திரன் சென்று இதுதொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகேந்திரன் மறைத்து வைத்திருந்த கட்டையால் காமாட்சியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காமாட்சி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்துபோன காமாட்சியின் உடலை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காமாட்சியை அடித்து கொன்றதாக கூறப்படும் மகேந்திரனை பிடித்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
