ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் தலைநகரில் தலையை தேடி அலையும் போலீசார்: கொலையானவரை அடையாளம் காண முடியாமல் திணறல்

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் கை, கால்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைத்து கொலையானவரின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தலை கிடைக்காததால் கொலையானவரை அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்ற மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றாலும், அது பெரிய அளவில் பேசு பொருளாக மாறுவதில்லை. ஆனால் தலைநகர் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும்போது அது பெரும் விவாத பொருளாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கடைசியாக சென்னையில் நடைபெற்ற கொலைகளில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. அப்போது சென்னை மாநகர ஆணையர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பின்பு இந்த கொலையில் 30 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டு, திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டார். இதில் சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா ஆகிய இருவர் தலைமறைவாகினர். மீதமுள்ள 27 பேரில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்து விட்டார். தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு பிறகு சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும், பெரிய அதிர்வலைகளை எந்த வழக்கும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அதே பெரம்பூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 4ல் கேட்பாரற்று கிடந்த ஒரு சூட்கேஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் தலை, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் புளியந்தோப்பு துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பெரம்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் பெரும்பாலான ரயில் நிலையங்களில் போதிய சிசிடிவி கேமரா இல்லை. இதேபோன்றுதான் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் பெயரளவிற்கு குறைவான சிசிடிவி கேமரா மட்டுமே உள்ளது. இதனால் போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இறந்தவரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் இறந்தவர் தலை துண்டிக்கப்பட்டு, 2 கைகளும் முட்டி வரை சதைப்பகுதி வழிக்கப்பட்டு எலும்போடு தனியாகவும், 2 கால்களும் முட்டிவரை சதை பகுதி முழுவதும் வழிக்கப்பட்டு எலும்போடு தனியாகவும் மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் போதிய துப்பு கிடைக்காததால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட 4வது நடைமேடையில் பெரும்பாலும் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து வரும் மின்சார ரயில்கள் பெரம்பூரில் நின்று திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் செல்வதால், போலீசார் கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கேமராக்கள் மற்றும் அந்த ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு எந்தெந்த பகுதியில் நின்று செல்லுமோ, அந்த ரயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் என பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

எப்படியாவது இந்த வழக்கை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் காவல்துறையினர் தலைநகர் சென்னையில் தலையை தேடி கடந்த 3 நாட்களாக அலைந்து வருகின்றனர். எங்கேயாவது இளைஞரின் தலை மீட்பு, கை கால்கள் மீட்பு என்கின்ற செய்தி வராதா என போலீசார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதை வைத்து இந்த வழக்கில் வேறு ஏதாவது துப்பு கிடைக்குமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தலை கிடைத்தால்தான் கொலை செய்தவர் யார் என்று தெரியும். அதன்பின்னர்தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். மேலும், சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே இப்படி ஒரு கொடூர கொலை எங்கும் நடந்ததில்லை.

ஒருவரை கொடூரமாக கொலை செய்தால் வழக்கமாக அந்த கொலையை மறைப்பதற்கு கொலையாளிகள் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த கொலை வழக்கில் கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த உடலை சூட்கேஸில் மறைத்து அதனை எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து விட்டு செல்கிறார்கள் என்றால் கொலையாளிகள் போலீசாருக்கோ அல்லது இந்த சமூகத்திற்கோ எதையோ ஒன்றை அடையாளம் காட்ட விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. காவல் துறையினர் மீது முன்பு இருந்த பயம் தற்போது கொலையாளிகளுக்கும், ரவுடிகளுக்கும் காவல்துறை மீது பயம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தலைதூக்கும் ரவுடியிசம்
தேர்தலுக்கு முன்னர் சென்னையில் இருந்த குற்றவாளிகள், ரவுடிகள் எல்லோரும் வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்ற நிலைதான் இருந்தது. ஆனால் தற்போது ரவுடிகள் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது மக்கள்தான் சென்னையை விட்டு ஓடும் நிலை ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக முதல்வர் தொகுதியான பெரம்பூரில்தான் இந்த உடல் கிடைத்துள்ளது. ரவுடிகளுக்கு போலீஸ் மீதான பயம் போய்விட்டதாகவே கூறப்படுகிறது.

5 தனிப்படை தேடுதல் வேட்டை
பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தாலும், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தலைமையில் எம்கேபி நகர் உதவி கமிஷனர் சரவணன், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு மற்றும் 5 இன்ஸ்பெக்டர்களை உள்ளடக்கிய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: