திண்டுக்கல், ஜூன் 7: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். அதில், ‘‘கல்லூரி விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை, தரமற்ற உணவு வழங்கப்படுகிறது, விடுதி வார்டன் செல்போன் மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
பின்னர் மாணவிகள் கூறுகையில், ‘‘எங்களுக்கு உணவு தயாராகி விட்டது என்பதை தெரிவிக்க ஆண்கள் விடுதியில் எங்களது செல்போன் நம்பரை கொடுத்து வைத்திருக்கிறோம். இதனை பயன்படுத்தி ஆண்கள் விடுதி வார்டன் இரவு நேரங்களில் செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்’’ என்றனர். ஏற்கனவே இக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் உள்பட 3 பேர் மீது சாதிய வன்கொடுமை, பாலியல் ரீதியாக பேசுதல் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
