தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாக பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடுத்துரைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மழைநீர் தேக்கம், சாலைகளில் மரங்கள் விழுதல் போன்ற மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சி துறையினர், நகராட்சி நிர்வாக துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலாளர் சாய்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: