அறிவிப்பு பலகையில் வெளியிடுவதில் என்ன பிரச்னை? கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல: அரசின் உத்தரவுக்கு  தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம், கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல. நியாயமாக வாங்கும் கட்டணத்தை அறிவிப்பு செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

தனியார் மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாணவர்கள் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிக அவசியம் எனக் குறிப்பிட்டு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளில் விளம்பரப்படுத்துவதையும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரியாக கட்டணத்தை அச்சிட்டு வழங்குவதையும் கட்டாயமாக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 5ம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடுமாறு அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவையும், அதன்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தொடர முடியும். சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர முடியாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்டண விகிதங்களை வெளியிட மறுக்க முடியாது. கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால் அதன் விவரங்களை தெரிவிக்கலாமே என்று கருத்து தெரிவித்து, வழக்கு குறித்து ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: