சென்னை: 131வது பிறந்த நாளையொட்டி காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். காயிதே மில்லத் 131வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நாசர், பி.கே.சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு, சிறுபான்மையினர் அணி செயலாளர் சுபேர்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே.சித்திக், பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன். ‘‘தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்” என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்;
கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர். அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
