சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.
வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அமலாகத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட உள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. ஆகாஷ் பாஸ்கரன் தனது தரப்பு வாதங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகள் நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
