33 ஆண்டுகளாக ஜவ்வாக நடந்த விசாரணை; 84 வயது முதியவர் குற்றவாளி என தீர்ப்பு: இன்று தண்டனை விபரங்கள் வெளியீடு

 

வைசாலி: பீகாரில் 1992ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் 84 வயது முதியவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஒரு மோதல் சம்பவம் நடந்தது. அங்கு வசித்த அதாலத் ராய் மற்றும் அவரது மனைவி ராம்சாகி தேவி ஆகியோர் வீட்டின் அருகே இருந்த பாதையில் தீப் ராய் (84) என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஆயுதம் ஏந்திய கூட்டாளிகளுடன் சேர்ந்து உடைந்த கண்ணாடி துண்டுகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த தம்பதியினர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 1993ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நீண்ட கால சட்டப் போராட்டத்தில் மொத்தம் 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் தீப் ராயை கலவரம் செய்தல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்தது.

இந்த முதியவர் மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் இருப்பதாலும், நடப்பதற்கும் அமருவதற்கும் மற்றவர்களின் உதவியை நாடும் சூழலில் இருப்பதாலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன. 1999ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், ‘குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும்’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: