புதுடெல்லி: கல்வி நிறுவனங்களை புகையிலையற்ற வளாகங்களாக மாற்றுவதை கண்காணிக்க புதிய செயலியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையினரிடையே புகையிலை மற்றும் நிகோடின் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களில் புகையிலை தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி (நாளை) கடைப்பிடிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கல்வி நிறுவனங்களை புகையிலையற்ற வளாகங்களாக மாற்றுவதை உறுதி செய்யும் வகையில் ‘புகையிலையற்ற கல்வி நிறுவனங்கள்’ என்ற புதிய டிஜிட்டல் செயலியின் சோதனை முயற்சியை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், புகையிலை தயாரிப்புகளின் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்வதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட நடைமுறையையும் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா இந்த புதிய செயலியை முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார்.
முதற்கட்டமாக இந்த செயலி ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த செயலி மூலம் கல்வி நிறுவனங்களின் 100 கெஜம் சுற்றளவிற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
