மோடி குறித்த அவதூறு வீடியோ வழக்கில் பெண் எழுத்தாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சண்டிகர்: பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் எழுத்தாளர் மது கிஷோரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு மற்றும் போலியான வீடியோவை பகிர்ந்ததாக எழுத்தாளர் மது கிஷோர் மீது மோசடி, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோ 1,74,000 பார்வையாளர்களைப் பெற்றதோடு, நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியில் இருப்பவரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இது தொடர்பாக சண்டிகர் போலீஸ் பதிவு செய்த வழக்கின்படி, மற்றொரு நபர் முதலில் வெளியிட்ட 14 விநாடி வீடியோவை, 18 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட மது கிஷோர் தனது பக்கத்தில் பதிவிறக்கம் செய்து பகிர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் அந்த வீடியோவை உருவாக்கவில்லை என்றும் கூறி மது கிஷோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தீவிர விசாரணைக்கு ஒத்துழைக்காமல் 20.4.2026, 26.4.2026 மற்றும் 5.5.2026 தேதிகளில் அனுப்பப்பட்ட போலீசாரின் நோட்டீஸ்களை அவர் புறக்கணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது முன்ஜாமீன் மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி அமன் சவுத்ரி, மது கிஷோரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றம் தனது உத்தரவில், ‘சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட மது கிஷோர் போன்ற பிரபலங்கள் இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் போது அதன் தாக்கம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். வெறும் ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கும், ஒருவரை இழிவுபடுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறு பிரசாரத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது’ என்று கடுமையாகக் கூறினார்.

Related Stories: