காந்திநகர்: கிர் வனப்பகுதியில் நோய் தொற்று காரணமாக 8 சிங்கங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற கிர் வனப்பகுதியில், குறிப்பாக கிர் கதாதா தாலுகா மற்றும் அம்ரேலி மாவட்டத்தின் பாபரியா பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டிகள் உட்பட 8 சிங்கங்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்கங்களின் உயிரிழப்புக்கு உண்ணிகளால் பரவும் ‘பேபெசியோசிஸ்’ என்ற நோய் தொற்றே காரணம் என வனத்துறையினர் சந்தேகித்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த சிங்கக்குட்டிகளின் உடற்கூறுகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வெளிவரும் என்றும், ஜூனாகத் கால்நடை மருத்துவக் கல்லூரி நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். அதேநேரம் கடந்த 2 நாட்களில் கிர் வனப்பகுதியில் புதிய சிங்கங்கள் எதுவும் உயிரிழக்கவில்லை என்றும், நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குஜராத் மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்துள்ளார்.
நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிங்கங்கள் உயிரிழந்த பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மற்ற சிங்கங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
