போபால்: வரதட்சணை மரண வழக்கில் கைதான ஓய்வுபெற்ற பெண் நீதிபதி கிரிபாலா சிங்கை ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் வைக்க போபால் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா, போபாலைச் சேர்ந்த வக்கீல் சமர்த் சிங் என்பவரை ‘டேட்டிங்’ செயலி மூலம் சந்தித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி போபாலில் உள்ள தனது வீட்டில் த்விஷா சர்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
த்விஷாவின் மரணத்திற்கு அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுத்த குடும்ப வன்முறையும், சித்திரவதையுமே காரணம் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இது குறித்து கட்டாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சமர்த் சிங்கின் தாயாரும், மத்திய பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவருமான ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங்குக்கு கடந்த 15ம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
ஆனால், இந்த முன்ஜாமீனை கடந்த 28ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. அதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங் மற்றும் அவரது மகன் சமர்த் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் போபால் நீதிமன்ற நீதிபதி ஷோபனா பாலாவி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் ஜூன் 2ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டார்.
மருமகளின் வரதட்சணை மரண வழக்கில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவரே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
