பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமாரை ஒருமனதாக தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை கடந்த 28ம் தேதி ராஜினாமா செய்ததை அடுத்து, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை அவரை தற்காலிக முதல்வராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூரில் உள்ள விதான சவுதா அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
புதிய முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை ஒருமனதாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இக்கூட்டத்திற்கு பிறகு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோருவார். புதிய அமைச்சரவை உருவாக்கம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக 5 முதல் 10 அமைச்சர்கள் வரை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, சித்தராமையாவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்த போதிலும், அவர் மாநில அரசியலிலேயே தொடர்ந்து தீவிரமாக செயல்பட விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில், கர்நாடகாமுதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்பார் என்று கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.சி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 5.15 மணியளவில் டி.கே.சிவகுமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இறை நம்பிக்கையும், ஜோதிட நாட்டமும் கொண்ட டி.கே.சிவகுமாருக்கு ஜோதிடர்களே ஜூன் 3-ம் தேதியில் மாலை 5.15 மணி முதல்வராக பதவியேற்க நல்ல நேரம் என்று குறித்துக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
