சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை ஆன் ஸே யங்கிடம் தோல்வியை தழுவினார். சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியா வீராங்கனை ஆன் ஸே யங் உடன் மோதினார்.
போட்டியின் துவக்கம் முதல் தென் கொரிய வீராங்கனை சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் புள்ளிகளை எளிதில் குவித்த அவர் 21-17 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் மேலும் ஆக்ரோஷம் காட்டிய அவர் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஆன் ஸே யங், அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுஃபெய், ஜப்பானின் டொமோகோ மியாஸாகி மோதினர். இப்போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக ஆடிய மியாஸாகி, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சென், அடுத்த இரு செட்களையும், 21-17, 21-8 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
