மதுராந்தகம் நகராட்சி மோச்சேரி கிராமத்தில் சேதமான பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் அடங்கிய மோச்சேரி கிராமம், இம்மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் பின்புறம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

மதுராந்தகத்தில் இருந்து சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையை கடந்து, திருவிக நகர் வழியாக மோச்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை அங்கிருந்து புதூர். அருந்ததிபாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக எல்.எண்டத்தூர் வழியாக உத்திரமேரூரை சென்றடைகிறது. இச்சாலையில் ஒரு கல்லூரியும் இயங்கி வருவதால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

மதுராந்தகத்தில் இருந்து மோச்சேரி வரை செல்லும் கிராமசாலை மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு குறுகிய தரைப்பாலமும் உள்ளது. இப்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் ஏராளமான மரங்கள் முளைத்ததால் அதிகளவு விரிசல்களுடன் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பாலத்தின் வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது லேசான அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பாலத்தின் வழியே மோச்சேரி கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

மேலும், இக்கிராம மக்கள் சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் கடக்கும்போது பலர் வாகனங்கள் மோதியதில் உயிரிழந்துள்ளனர். தற்போது ஜிஎஸ்டி நெடுஞ்சாலையின் குறுக்கே, வாகனங்கள் சென்றுவர புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால் மோச்சேரி கிராமம் வளர்ச்சி பெறும். குடியிருப்புகளும் அதிகரித்து, மதுராந்தகம் நகரின் எல்லையும் விரிவடையும்.

எனவே, மதுராந்தகம் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் இருந்து மோச்சேரி கிராமத்துக்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலையை நீர்வழி பாதையாக மாற்ற வேண்டும். அதே சமயம், அங்கு சேதமான நிலையில் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிதாக மேம்பாலம் அமைத்து தருவதற்கு புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிககை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: