‘4.5 டன் பழங்களால் டைனோசர் அலங்காரம்’; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவங்கியது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66வது பழக்கண்காட்சி இன்று துவங்கியது. இதில் 4.5 டன் பழங்களால் உருவாக்கப்பட்ட டைனோசர் அலங்காரம் உள்பட பல்வேறு அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரியில் கோடை சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். ஏற்கனவே ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி நடந்து முடிந்துள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில், கோடைவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்கண்காட்சி இன்று துவங்கியது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தனர். வரும் 30ம் தேதி வரை 4 நாட்கள் இந்த பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் சிறப்பம்சமாக, குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் ‘ஜுராசிக் பார்க்’ என்ற பிரத்யேக கருப்பொருளில் அலங்கார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 4.5 டன் பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எலுமிச்சை பழங்கள், பேரிச்சம் பழங்கள், உலர் திராட்சைகள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு டைனோசர் உருவம் தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வரப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவிலான டைனோசர்கள் மூன்று, டைனோசர் முட்டையில் இருந்து வெளிவரும் தத்ரூபக் காட்சி, டைனோசர் குறித்து அன்னாசி மற்றும் செவ்வாழை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் என பல்வேறு வடிவங்களும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவர்ந்து வருகின்றன.
மேலும் ​இக்கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது மாவட்டங்களின் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில், பிரத்யேக பழங்களை கொண்டு அரங்குகளை அமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். இக்கண்காட்சியை காண சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories: