பண்ருட்டி: பண்ருட்டியில் முந்திரி விலை மூட்டைக்கு ரூ.2,500 வரை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தனிச்சுவை கொண்ட ‘முத்தான முந்திரி’ தான். உலகளவில் பெயர் பெற்ற பண்ருட்டி முந்திரிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இந்த ஆண்டு பருவமழை சாதகமாக இருந்ததால் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி விளைச்சல் அமோகமாக உள்ளது. தோட்டங்களில் மரங்கள் முழுவதும் முந்திரி பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து குலுங்குகின்றன. தற்போது பண்ருட்டி சந்தையில் முதல் ரக முந்திரி கொட்டை 80 கிலோ மூட்டை ரூ.10,500 முதல் ரூ.11,200 வரையும், 2ம் ரகம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரையும் விலை போகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முதல் ரகம் ரூ.13,500 வரை விற்பனையானது. கடந்த ஆண்டைவிட ஒரு மூட்டைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக பண்ருட்டி வட்டார முந்திரி விவசாயிகளிடம் கேட்டபோது, ‘இந்த வருஷம் விளைச்சல் நன்றாக இருந்தும் வெளிநாட்டு முந்திரி கொட்டை இறக்குமதியால் உள்ளூர் முந்திரிக்கு விலையில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். முந்திரியை பறிக்க கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்களுக்கான கூலி அதிகம். மரத்தில் இருந்து கொட்டுற முந்திரியை அப்படியே விட்டுட்டு போகவேண்டிய நிலைமை உள்ளது. புவிசார் குறியீடு கிடைத்தும் முழுமையான பயனை எங்களால் பெற முடியவில்லை. எனவே தரமான பண்ருட்டி முந்திரிக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு மூட்டைக்கு ரூ.15,000 நிர்ணயம் செய்ய வேண்டும். அரசே நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
