சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்; சில கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் அவரிடம் வைத்தோம் என எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார். பழனிசாமி தரப்பினர் மீதான தகுதிநீக்க மனுக்களை திரும்பப் பெற்றோம் என்று SP வேலுமணி தெரிவித்தார்.
தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு சில கருத்துக்களை நாங்கள் தெரிவித்தோம். மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் 25 பேர் மீதும், எங்கள் தரப்பில் 22 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை கோரி கடிதம் வழங்கி இருந்தோம்.
இந்நிலையில், இன்று பேரவை தலைவரை சந்தித்து எங்கள் கடிதத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான், ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். மேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தோம். நாங்கள் அனைவரும் ஒரே கட்சியில்தான் இருக்கிறோம் கருத்து வேறுபாடு தானே தவிர பிளவு கிடையாது. இப்போது கருத்து வேறுபாடும் நீங்கிவிட்டது.
மேலும் அதிக வலுவோடு இந்த கட்சி தொடரும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை. இதனை ஆளுங்கட்சியும் உறுதி செய்துவிட்டது. மேலும், சி.வி சண்முகம் எங்களுடன் தான் இருக்கிறார் என்று SP வேலுமணி தெரிவித்தார்.
