வேலூர்: வேலூர் அடுத்த கணியம்பாடி, புதூர், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. கடந்த 22ம் தேதி கணியம்பாடி ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உட்பட பலர் கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் செங்கல் சூளைகளில் புகுந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என உரிமையாளர்களை மிரட்டி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த வேலூர் தாலுகா போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். தவெக நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்து 2 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால் கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் திரண்டு நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த டி.விஜயகுமார், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார்’.
