தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

 

சென்னை: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய 51வது கூட்டம், தலைவர் ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர் சத்யபிரதா சாகு, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
இதில், தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 40.742 டி.எம்சி. அணையிலிருந்து வினாடிக்கு 1003 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது.

நடப்பு நீர்பாசன ஆண்டில் (2025-26) 2025, ஜூன் 1 முதல் 2026, மே 24ம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 176.685 டி.எம்.சிக்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப்பெற்ற நீரின் அளவு 329.166 டி.எம்சி. இதனை சுட்டிக்காட்டி, கர்நாடக உறுப்பினர், கர்நாடகம் அளித்த மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததை, ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கர்நாடகம் அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தமிழக உறுப்பினர் வலியுறுத்தினார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி 2026 மே 26 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்ற கருத்தின்படியும், கர்நாடக அணைகளின் நீர் வரத்தை கருத்தில் கொண்டும் தமிழகத்திற்கு ஜூனில் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தினார்.

Related Stories: