சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக விஜய் இன்று டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது.
முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் தொடர்ச்சியாக, டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இதற்காக அவர் இன்று காலை 10 மணி தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதல்வர் விஜய் மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோர இருக்கிறார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்தித்து பேச உள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார். தமிழக அரசின் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் ஆகியவற்றை புதுப்பித்து தயாராக உள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு வரும் விஜய்க்கு அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
