வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக குறைந்த கட்டண சிறப்பு விமானங்கள்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

 

சென்னை: அமெரிக்கா ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தாயகம் திரும்ப விரும்பும் வளைகுடா வாழ் தமிழர்கள் தற்போது மிக அதிகமான விமான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் தொழிலாளர்கள், டிரைவர்கள், கட்டுமான பணியாளர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் நிறுவன ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், திடீரென ஏற்பட்டுள்ள விமான கட்டண உயர்வு அவர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் சிறப்பு விமான சேவைகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, ரியாத், ஜித்தா, தோகா உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற தமிழக நகரங்களுக்கு முதற்கட்டமாக மாதம் இரண்டு சிறப்பு விமானங்களை இயக்கலாம். இந்த சிறப்பு விமானங்களில் சலுகை கட்டணத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவசர தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் ஹபீபுல்லாகான், பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக முதல்வர் விஜயிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் பயண சுமையை குறைக்கவும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: