தொடர் மின்வெட்டு கண்டித்து முதல்வர் வீடு அருகே நள்ளிரவில் மக்கள் சாலைமறியல்

 

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சமீப காலமாக தினந்தோறும் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று முன்தினமும் நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இசிஆர் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த நீலாங்கரை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வலியுறுத்தினர். ஆனால் மின் இணைப்பு வரும் வரை சாலை மறியலை கைவிட முடியாது என அனைவரும் திட்டவட்டமாக கூறினர். சுமார் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்பு காவல் துறையினர் மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு மின்வெட்டு சரி செய்யப்பட்டது. இருந்தபோதும், மீண்டும் இதுபோல் நள்ளிரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் சாலையை மறித்து போராட்டத்தை தொடர்வோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: