இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள், உணவுப் பொருட்கள் விலை, விவசாயச் செலவுகள், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவு எனப் பொருளாதாரம் முழுவதும் சங்கிலித் தொடர் விளைவுகள் ஏற்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், ஊதியம் பெறும் பிரிவினர் மற்றும் ஏழை எளிய மக்கள் ஏற்கனவே ஆழமான பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இத்தருணத்தில், அரசு மேலும் கடுமையான பணவீக்கத்தின் மூலம் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றத் தேர்ந்தெடுத்துள்ளது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளே விலை மாற்றங்களுக்குக் காரணம் என்று மோடி அரசு தரும் விளக்கத்தை ஏற்க முடியாது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணிசமான லாபத்தையே ஈட்டி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சுமார் ரூ. 14,458 கோடி லாபமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 4,902 கோடி லாபமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 3,191 கோடி லாபமும் ஈட்டியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டி வரும் நிலையில், அந்தப் பலன்கள் ஏன் நுகர்வோருக்கு வழங்கப்படுவதில்லை? மக்களைவிட கார்ப்பரேட் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு கூறினார்.
