குன்னம்: பெரம்பலூர் அருகே திமுக-விசிகவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா எம்.பி ஆகியோரை பொது வெளியிலும், இணையதளத்திலும், விசிக குன்னம் தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தன் தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நேற்று காலை குன்னத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்து இருந்தனர். இதேபோல் ஆ.ராசா எம்பியை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குன்னத்தில் நடைபெற உள்ளதாக விசிகவினர் அறிவித்திருந்தனர். இரண்டு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் நேற்று குன்னம் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே இரண்டு கட்சியினரும் கூட்டமாக கூடிநின்றனர். அப்போது குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற சிவசங்கருக்காக, திமுக நிர்வாகிகள், கட்சியினர் ஆலத்தூர் பகுதி மேலமாத்தூர் வரிசைபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நன்றி தெரிவிக்க காரில் சென்றனர். அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த விசிகவினர் காரில் சென்ற திமுகவினரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. விசிகவினர் கல் மற்றும் கட்டையால் திமுகவினரை பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பெரம்பலூர் எஸ்பி லலித்குமார், மங்களமேடு டிஎஸ்பி ஆனந்தி தலைமையில் போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலர் ஒருவரை கீழே தள்ளிவிட்டனர். இந்த போராட்டத்தால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அதிவிரைவுப்படை போலீசார் களமிறங்கி திமுக மற்றும் விசிகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த மோதலில் திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் புகழேந்தி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் குன்னம் ரமேஷ் உள்பட திமுகவினர் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
