ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்குள் தவெக எம்எல்ஏக்கள் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் குழந்தைகள் வார்டு பகுதியில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டமாக நிர்வாகிகளுடன் செருப்பு அணிந்து சென்றனர். இதற்கு நோயாளிகள், பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று தவெக எம்எல்ஏக்கள் கம்பம் ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சபரி ஐங்கரன் ஆகியோர் ஆய்வு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், மற்ற பொது வார்டுகளை எதையும் ஆய்வு செய்யாமல், நேரடியாக எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் மையத்திற்குள் மொத்தமாக நுழைந்தனர். அதிநவீன கருவிகள் கொண்ட அந்த மையத்திற்குள் நுழையும்போது, விதிகளின்படி செருப்புகளை கழற்றிவிட்டுச் செல்ல வேண்டும். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் செருப்புகளை கழற்றாமலேயே உள்ளே புகுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் நேரடியாக பிரசவ வார்டு மற்றும் பச்சிளங்குழந்தைகள் வார்டை நோக்கிச் சென்றனர். பெண்கள் மற்றும் பிரசவ வார்டுக்குள் ஆண்கள் நுழைவதற்கு அனுமதியில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வார்டுக்கு வெளியே தெளிவான அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த விதிமுறைகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு, தவெக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், செருப்பை கூட கழற்றாமல் கூட்டமாக பிரசவம், பச்சிளம் குழந்தைகள் வார்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால் அங்கு சிகிச்சையில் இருந்த பெண் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பதற்றமும், அச்சமும் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
