அமைச்சர் செங்ஸ் ஆசியோட தவெகவில் இணைந்தால் ரூ.300 கோடி மோசடி கேஸ் க்ளோஸ்னு சொன்னாங்க: நீதிபதி முன் வின் ஸ்டார் சிவக்குமார் கதறல்

 

சேலம்: அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தால் பிரச்னையை முடித்து கொடுப்பார் என ஊரைச்சேர்ந்தவர்கள் அழைத்து சென்றதாக வின் ஸ்டார் சிவக்குமார் கதறி அழுதார். சேலத்தில் வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர் ஈரோடு சிவகிரியை சேர்ந்த சிவக்குமார். தன்னிடம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என கூறியதால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரை நம்பி முதலீடு செய்தனர்.

ஆனால், வசூலித்த பணத்துடன் அவர் தலைமறைவானார். சிவக்குமார் ரூ.300 கோடி மோசடி செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிவக்குமார் மற்றும் அவரிடம் பணியாற்றிய மேலாளர்கள் என 30 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், 2,300 பேர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானோர் புகார் அளிக்காமல், சிவக்குமார் பணத்தை திருப்பி தருவார் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையத்தில் சிங்கப்பூர் சிட்டி என்ற பெயரில் சிவக்குமார் 8 லட்சத்து 85 ஆயிரத்து 65 சதுரஅடி நிலத்தை 1,134 பிளாட்டுகளாக பிரித்து வைத்திருந்தார். இதனை சேலத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் மணிகண்டன் ரூ.23 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 25க்கு ஏலம் எடுத்தார். ஆனால் தற்போது தன்னால் பணத்தை கட்டமுடியாது என கைவிரித்துவிட்டார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி இந்த வழக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து ஏலம் எடுத்த மணிகண்டன் மற்றும் ஏலத்தில் கலந்து கொண்ட 10 ரியல் எஸ்டேட் அதிபர்கள், வின் ஸ்டார் சிவக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அக்பர்அலி, டிஎஸ்பி ஹரிசங்கரி உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

நிலத்தை எடுத்த மணிகண்டன், நான் அதிகமான தொகைக்கு ஏலத்தை எடுத்துவிட்டேன், அந்த இடம் வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி, அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இவருக்கு பின்னால் ஏலம் எடுத்தவர்களிடம் நிலத்தை பெற்றுக்கொள்கிறீர்களா? என கேட்கப்பட்டது. 3வதாக ஏலம் கேட்டவர் சதுரடி ரூ.235 என்றால் நிலத்தை எடுப்பதாக கூறினார். ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டனர். கூடுதல் தொகைக்கு நிலத்தை வாங்கினால் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இதற்கிடையில் கூட்டத்திற்கு வந்த வின் ஸ்டார் சிவக்குமார் குமுறி குமுறி அழுதார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தியும் கேட்காமல் அழுதுகொண்டே இருந்தார். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் துரோகம் செய்ததாக கூறுகின்றனர். இந்த அவமானத்தோடு வாழமாட்டேன், தற்கொலை செய்து கொள்வேன் என திரும்பத்திரும்ப கூறினார்.

பணமதிப்பிழப்பினால் தான் சிக்கிக்கொண்டேன் எனவும் கூறினார். தவெகவில் இணைந்தால் பிரச்னையை அமைச்சர் செங்கோட்டையன் முடித்துக் கொடுத்து விடுவார் என என்னை எங்கள் ஊர்காரர்கள் அழைத்து சென்றனர். வழக்கில் உள்ள எனது நிலத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம் என கூறியதுடன், நிலத்தை விற்பனை செய்து மீதமிருக்கும் பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என கூறினார்.

இந்நிலையில் நிலம் விற்பனை தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், கமிட்டி தலைவரான நீதிபதியும் ஆலோசனை நடத்தினர். மேலும் நிலம் விற்பனை செய்யும் விவகாரத்தில் வின் ஸ்டார் சிவக்குமார் தலையிட கூடாது, அதே நேரத்தில் நிலத்தை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக வழங்க பட்டியல் எடுத்து வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: