சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் கொடுத்து ரூ.10 பெறும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தால் கடைகளில் இடப்பற்றாக்குறை, பாட்டில்கள் சேதமாகிறது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையை டாஸ்மாக் தலைமையகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் மதுபானத்திற்கு ரூ.10 கூடுதலாக வாங்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்புபை சேர்ந்த 12 தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று காலை சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அதிகாரிகள் அழைத்தனர். அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு 2 நிர்வாகிகள் என்ற விகிதத்தில் 12 தொழிற்சங்கங்களின் சார்பில் மொத்தம் 24 நிர்வாகிகளை போலீசார் பேச்சுவார்த்தைக்கு அனுமதித்தனர்.
அதைதொடர்ந்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தற்போது காலி பாட்டில்கள் திரும்ப பெறுவது குறித்து டாஸ்மாக் தலைமை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம் இந்த போராட்டத்தால் சென்னை மண்டலத்தில் 1,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று வழக்கமாக பகல் 12 மணிக்கு திறக்காமல் அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு அந்தந்த காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் டாஸ்மாக் கடைகள் பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
